Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 192 – பூவும், நீரும் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

192. பூவும், நீரும் என் மனம். பொருந்து கோயில் என் உளம். ஆவியோடு லிங்கமாய் அகண்டமெங்கும் ஆகிடும். மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் , ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே !.

உள்ளம் பெரும் கோயில் – ஊனுடம்பு ஆலயம் எனும் திருமூலரின் வாக்குப்படி இப்பாடலை வடித்துள்ளார். பூவும் என்றால் மண். மண் , நீர் , இரண்டும் சேர்ந்தது தான் என் மணம் (பசு) என்கிறார். என் உள்ளம் தான் கோயில் என்கிறார். கோ என்றால் தலைவன் நாதன் (பதி) என்று பொருள் அந்த கோ சதா இருக்கும் இடம் தான் கோயில். வெளி (சத்தம்) , காற்று , வெப்பம் எனும் ஆதியான மூவராக உள்ள அதாவது அதிர்வு எனும் வெளி ( நாதம் ) தான் ஆவி. லிங்கம் என்றால் சிவம் சக்தி சேர்ந்த அரு உருவம். உள்ளம் உண்மையை மட்டுமே உணர்த்தும். மனம் பாசத்தால் (அறிவற்ற பொருளால்) அலை பாயும். மனமும் இந்த உள்ளம் தான் (ஆழ் மனம்) பேரண்டத்தில் வியாபித்து இருக்கிறது என்கிறார். இதற்கு இந்த மனத்திற்கு இந்த அண்டத்தை உணர சுவை, ஒளி , ஊறு , ஓசை, நாற்றம் எனும் ஐவரும் நம் அறிவு, புத்தி எனும் தீபங்களாய் வழிகாட்டுகின்றன. திருவள்ளுவர் சொன்னது போல், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவ்வைந்தின் வகை அறிவான் கட்டே உலகு , என்பது போல் இந்த அறிவால் நான் எனும் மனம் அண்டத்தை உணரத் தலைப் படுகிறது. ஆனால் அனைத்தையும் அறிந்த இறைவனான உள்ளம் நம்மை வழி நடத்தும். அதை கவனிக்காமல் ஐம்புலன்கள் காட்டும் அறிவற்ற பொருட்களில் ஆட் பட்டால் அவன் திகைத்து காத்திருப்பான். அப்படி அகண்டத்தை கட்டுக்குள் வைத்திருப்பவனுக்கு (ஆடுகின்ற கூத்தனுக்கோர்) அந்தி சந்தி (உதயம், மறைவு) இல்லை என்கிறார்.

Related Posts